எனக்கும், உனக்கும்….

வெற்றிகள் உனக்கு
சிற்பங்கள் பரிசளிக்கலாம்
ஆனால்
தோல்விகள் மட்டுமே உனக்கு
உளிகள் வழங்கும்
என்பதை உணர்ந்து கொள்.



மழை
நதி
விதை
விழுவதால் எழுபவை இவை.
நீ மட்டும் ஏன்
விழுந்த இடத்தில்
உனக்கு நீயே
கல்லறை கட்டுகிறாய்.



உன் சுவடுகள்
சிறை பிடிக்கப்படலாம்
உன் பாதைகள்
திருடப்படலாம்
பயப்படாதே
பாதங்களைப் பாதுகாத்துக் கொள்.



நீ
வெற்றி பெற்றதாய் நினைக்கும்
பல இடங்களில்
தோல்வி தான் அடைந்திருப்பாய்
நீ
தோற்றுப் போனதாய் நினைக்கும்
பல தருணங்களில்
வெற்றி தான் பெற்றிருப்பாய்
உணர்ந்து கொள்
நீ
தோல்வியடைந்தது வாழ்க்கையிலல்ல
புரிதலில்.



உன் வழிகளெங்கும்
தூண்டில்கள் விழித்திருக்கலாம்
நீந்த முடியாதபடி
வலைகள் விரித்திருக்கலாம்
தண்ணீராய் மாறி தப்பித்துக் கொள்
தங்கமீனாய்
தான் இருப்பேனென
தர்க்கம் செய்யாதே !



காட்டாறு கரை புரண்டு வருகிறதா
நாணலாய் மாறு
புயல்க்காற்று புறப்படுகிறதா
புல்லாய் மாறு
தொட்டாச் சிணுங்கியாய் இருப்பதும்
பச்சோந்தியாய் மாறுவதும்
தப்பில்லை
மனித நேயத்தை
நீ
மறுதலிக்காத வரை !

No comments:

Post a Comment