பிரியமூட்டி வளர்க்கிறேன்….

உனக்குத் தருவதற்கென்றே
வளர்த்து வருகிறேன்.

எங்கே சென்றாலும்
காலைச்
சுற்றிச் சுற்றி வந்து
முதுகு தேய்க்கும்
வெல்வெட்
நாய்க்குட்டியாகவோ,

புரண்டு படுக்கும் போதும்
கூடவே புரண்டு படுத்து
என்
போர்வைக்குள்ளேயே
மெல்லமாய்ப் பிராண்டும்
செல்ல
பூனைக்குட்டியாகவோ,
அதை நினைத்துக் கொள்ளலாம்.

உன்னைப் பற்றிய
கனவுகளைக்
கவளம் கவளமாய்த் தின்று
உன்
அழகு குடித்து
வளர்ந்து கிடக்கிறது அது.

நீ
புறக்கணிப்பாயோ
இல்லை
நீயும் ஒன்றை
அப்படியே வளர்க்கிறாயோ ?
தெரியவில்லை.

ஆனாலும்
கைகளில்
ஏந்திப் பார்க்காமல்
இருந்து விடாதே
பிரியமூட்டி பிரியமூட்டி
வளர்த்த இதயம் அது.

No comments:

Post a Comment