எப்போ போவேனோ..

எப்போ போவேனோ..



குயில் கூவுறதும்
கறவ கத்துறதும்
காது குளிர கேட்டு
காலைல கண் முழிப்பேன்...

வாய் ஓயாம
வஞ்சாலும்
வாய்க்கு ருசியா
வக்கணையா
சமைச்சு போடும் ஆத்தா...

வட்டிக்கு பணம் கட்ட
வக்கில்லைனாலும் நான்
வேண்டியத வாங்கியாரும்
அப்புச்சி....

எலேய்னு ஒரு குரல் கொடுத்தா
எங்க இருந்தாலும்
என்னான்னு ஓடிவந்து
எனக்கு வேலை செய்யும் தம்பி...

போடி வாடின்னு சண்ட போட்டாலும்
போட்டி போட்டு அடிச்சுகிட்டாலும்
பொய் சொல்லகூட மனசு வராத
பொண்ணு எந்தங்கச்சி...

படிச்சு கிழிச்சாச்சு
பட்டமும் வாங்கியாச்சு
பாரின் கம்பெனில
வேலையும் கிடைச்சாச்சு...

தல வலிச்சா சாய ஆத்தா மடி இல்ல
மருந்து வாங்க அப்புச்சி கூட இல்ல
தைலம் தேய்க்க தம்பியும் இல்ல
தண்ணி 'இந்தா'னு குடுக்க தங்கச்சியும் இங்க இல்ல...

உசிலம்பட்டில பொறந்து
ஊருவிட்டு வந்து
வெந்த ரொட்டியும்
வேகாத அரிசியும்
தின்னும் பொது
கண்ணு தான கலங்குதுக
கூட இருக்குறதுக
காரமானு கேக்குதுக
காரம் ஒன்னும் இல்ல
பாரம் தான்னு சொல்ல
மனசுக்கு தெம்பு இல்ல
வாய்க்கு வார்த்தை இல்ல...

காசுக்கு
வாழ்க்கைய தொலச்ச
கயரா கூட்டத்தவிட்டு
எப்போ போவேனோ
எனக்கும் தெரியல...

No comments:

Post a Comment